யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2017-01-29

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம். 2:3, 3:12-13, அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!.,திருத்தூதர் பவுல்கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1:26-31,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5:1-12)




ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.


திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்புநிறை சகோதரர்களே சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் இயேசுவின் பெயரில் என் அன்பையும் வாழ்த்தையும் உரித்தாக்குகிறேன். ஆண்டின் பொதுக்காலம் 4 ஆம் வாரத்திலிருக்கும் நாம் இன்று சிறப்பாக இயேசுவின் பணியைத் தொடர்ந்தாற்ற அழைக்கப்படுகிறோம். இந்த சிறப்பு நிலையைப் பெற இன்றைய இறை வாக்குகளின் ஊடாக நம் சிந்தனைகளை செலுத்த விழைவோம்.

அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றவரும்: பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றவருமான நம் ஆண்டவரின் சந்நிதானத்தில் ஒன்று கூடியுள்ளோம். இன்றைய நாளில் மீண்டும் நமக்கு நம்பிக்கையூட்டி, நிறைவாழ்வுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார் இறைவன். ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்: பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்: சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்: தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்: என்பதே அவர் தருகின்ற நிறைவாழ்வாகும். ஆகவே நாம் அனைவரும் இறைவன் காட்டும் வழியில் நடக்க வரம் கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

ஏழ்மையும், எளிமையும் உள்ள மக்களை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்
இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம். 2:3, 3:12-13

செப்பனியா கூறியது: நாட்டிலிருக்கும் எளியோரே! ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிப்போரே! அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்: நேர்மையை நாடுங்கள்: மனத்தாழ்மையைத் தேடுங்கள்: ஆண்டவரது சினத்தின் நாளில் ஒரு வேளை உங்களுக்குப் புகலிடம் கிடைக்கும். ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்: அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வார்கள். இஸ்ரயேலில் எஞ்சியோர் கொடுமை செய்யமாட்டார்கள்: வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது: அச்சுறுத்துவார் யாருமின்றி, அவர்கள் மந்தைபோல் மேய்ந்து இளைப்பாறுவார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

திருப்பாடல்: 146:7-10
அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!.

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்: பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்: சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி

ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்: தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்: நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்: பல்லவி

அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்: ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி

இரண்டாம் வாசகம்

வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் கடவுள் தேர்ந்துகொண்டார்.
திருத்தூதர் பவுல்கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1:26-31

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனைபேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடி மக்கள் எத்தனை பேர்? ஆனால் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்து விட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார். எவரும் கடவுள் முன் பெருமைபாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார். அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார். எனவே மறைநூலில் எழுதியுள்ளவாறு, பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5:1-12

இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்: ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்: ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்: ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்: ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்: ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்: ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்: ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்: ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவை யெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்யும் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும் கனிவுடையோராகவும், நீதி நிலை நாட்டும் வேட்கை கொண்டோரகவும், இரக்கமுடையோராகவும், தூய உள்ளத்தினராயும், அமைதியை ஏற்படுத்துவோராயும் பணியாற்றுவதற்கு வேண்டிய வல்லமையை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. பார்வையற்றோரின் கண்களைத் திறக்கும் தந்தையே இறைவா!

எம்மிடம் உள்ள ஆன்மிகத் தெளிவின்னையைப் போக்கி. கனிவுடையோராகவும், நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோரகவும், இரக்கமுடையோராகவும், தூய உள்ளத்தினராயும், அமைதியை ஏற்படுத்துவோராயும நாம் வாழ எமக்கு ஆற்றல் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. உம் திருமலையிலிருந்து எமக்குப் பதிலளிக்கும் எம் இறைவா!

எங்கள் குடும்பங்களின் தேவைகளை அறிந்து எம் மன்றாட்டுகளுக்குச் செவிசாய்தருளும். நாங்கள் உம்மிடம் வேண்டிக்கேட்பதைவிட மேலானவற்றைப் பொழிந்து எம் குடும்பங்களில் அன்பும் நட்பும் மலர அனைவரும் ஒன்றிணைந்துச் செயல்பட வேண்டிய ஞானத்தையும் விவேகத்தையும் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எம் வலிமைமிகு கற்பாறையும் புகலிடமுமான எம் இறைவா!

இந்த விழாக்காலங்களில் இயற்கையின் ஏமாற்றத்தால் நொந்து நூலாகிப்போன எம் விவசாயத் தொழிளாலர்களைக் கண்ணேக்கிப்பாரும். அவலங்கள் நீங்கி வளமைப் பெற்ற அவர்களின் வாழவாதரங்கள் மாறிட வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எம் வாழ்க்கையில் ஒவ்வொருகட்டத்திலும் எம்மைக் காக்கும் இறைவா!

எம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தில் உள்ள நலிந்தோரையும், நோயாளிகளையும், கைவிடப்பட்டடோர்களையும், நாடோடிகளாய் வாழும் எளியோரையும் பேணிக்காத்து அவர்கள் வாழ்வு உயர நாங்கள் அனைவரும் உழைக்க வேண்டிய நல்ல மனதினைத் தருமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6. நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கும் தந்தையே இறைவா!

பல்வேறு விதமான நோய்களால் பாதிக்கப்பட்டு வேதனையோடும், கவலையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரையும் ஆசீர்வதித்து அவர்களைக் குணப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

7. உம் இறக்கைகளின் பாதுகாப்பில் எம்மை அரவணைக்கும் எம் இறைவா!

உலகெங்கும் உள்ள இளையோர்களை மாற்றங்களால் நாளுக்குநாள் மாறிக்கொண்டேயிருக்கும் இவ்வுலகச் சுகபோகவாழ்க்கையிலிருந்து மீட்டுத் தன்னலமற்ற சேவை வாழ்க்கையில் ஈடுபடவும், சமுதாயத்தில் தங்களின் தூயவாழ்வால் இயேசுவின் சாட்சிகளாய் வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்'' (மத்தேயு 5:6)

''தாகமுற்றோர்க்குக் கடவுள் நிறைவளித்தார்; பசியுற்றோரை நன்மைகளால் நிரப்பினார்'' எனத் திருப்பாடல்கள் நூல் கூறுகிறது (காண்க: திபா 107:5,9). பசியும் தாகமும் மனிதருக்கு இயல்பான அனுபவம். உணவும் நீரும் பசிதாகம் போக்க உதவுகின்றன. நீதியை நிலைநாட்ட வேண்டும் என்னும் ''வேட்கை''யும் அடிப்படையில் பசி, தாகம் போன்ற ஆவல்தான். அந்த வேட்கையை நாம் நிறைவுசெய்ய வேண்டும் என்றால் எத்தகைய நீதியை நிலைநாட்டுவது என்னும் கேள்வி எழுகிறது. பழைய ஏற்பாட்டில் ''நீதி'' என்பது கடவுள் தம் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை முழுமனத்தோடு கடைப்பிடிப்பதைக் குறித்தது. மத்தேயு ''நீதி'' என்னும் சொல்லை ஏழு முறை பயன்படுத்துகிறார். இயேசுவின் மலைப் பொழிவில் மட்டும் இச்சொல் ஐந்துமுறை வருகிறது (மத் 5:6,10,20; 6:1,33). தமிழ் மொழி பெயர்ப்பில் ''நீதி'', ''நெறி'', ''அறச்செயல்'', ''ஏற்புடையவை'', ''நீதிநெறி'' (காண்க: மத் 3:15; 21:32) என்னும் பல சொல்கள் ஒரே கருத்தை வலியுறுத்தும் வகையில் உள்ளன. எனவே, நாம் ''நீதிநிலைநாட்டுவதில் வேட்கை'' கொண்டிருக்க வேண்டும் என இயேசு கற்பிப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் விவிலியப் பார்வையில் நீதி எதைக் குறிக்கிறது என்பதை அறிவது தேவை.

இவ்வுலகில் மனிதர் எவ்வாறு வாழ வேண்டும் எனக் கடவுள் விரும்புகிறாரோ அவ்வாறு நாம் வாழ்ந்தால் நாம் நீதியைக் கடைப்பிடிக்கிறோம் என்பது பொருள். இது உறவுகளின் அடிப்படையில் எழுகின்ற ஓர் ஒழுங்குமுறை எனலாம். கடவுள் நம்மோடு உறவாடுகின்றார். அந்த உறவின் பயனை நாம் அனுபவிக்கின்ற அதே வேளையில் கடவுளோடு நாமும் நல்லுறவு கொள்வது ''நீதி'' ஆகும். கடவுள் எல்லா மனிதரையும் அன்புசெய்து அவர்களுக்குத் தம் வாழ்வில் பங்களிக்கின்றார். அதையே நம் வாழ்க்கை நெறியாக நாம் கொள்ளும்போது ''நீதி'' நம் வாழ்வில் துலங்கும். இறுதியாக, கடவுள் தாம் படைத்த உலகை அன்போடு பராமரிக்கின்றார். நாமும் படைப்புலகைப் பொறுப்போடு ஆண்டு நடத்தும்போது ''நீதி'' அங்கே துலங்கும். இத்தகைய வாழ்க்கை நெறியை இயேசு நமக்குக் கற்றுத் தருகிறார். அந்நெறிப்படி நாம் நடக்கும்போது எந்நாளும் நீடிக்கின்ற வாழ்வை, விண்ணக நாட்டை நாம் அடைவோம் என்பது இயேசு நமக்குத் தருகின்ற வாக்குறுதி (காண்க: மத் 5:6).

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்வில் நல்லுறவுகள் நாளும் வளர்ந்திட அருள்தாரும்.